வடகிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் உள்ள கயா நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் போத் கயா அல்லது புத்த கயா என்று அழைக்கப்படுகிறது, மன்னன் சுத்தோதனனின் மகனான சித்தார்த்த கௌதமர் தனது இளவரச வாழ்க்கையைத் துறந்து துறவியாக மாறி பல வருட தியானத்திற்குப் பிறகு ஞானம் அல்லது "புத்தத்துவம்" அடைந்த இடம் இதுவாகும். உலகெங்கிலும் உள்ள 300 மில்லியன் பௌத்தர்களுக்கு, இது மிக முக்கியமான புனித தலமாகும் . அனகாரிக தர்மபாலவைப் பொறுத்தவரை, புத்த கயா ஒரு கண்ணீர் போராட்டம் , அவர் தனது 20 வயதில் தொடங்கிய ஒரு வாழ்க்கைப் பணி.
புத்தரின் மறைவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் புத்தரை வணங்குவதற்காக மன்னர் (பின்னர் பேரரசர்) அசோகர் கட்டிய கோயில் கைவிடப்பட்டிருந்தது. இந்து மதத்தைச் சேர்ந்த பலம்வாய்ந்த 'மஹந்த்' என்பவரால் புனித தலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தர்மபால, புத்த கயாவை "பௌத்த ஜெருசலேம்" என்று வர்ணித்தார் .புத்த கயா மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது இளம் தர்மபாலவை உற்சாகப்படுத்தியது மற்றும் புத்த கயாவின் மீது அவரது ஆர்வத்தை ஈர்த்தது. இந்தியாவில் பௌத்த தலங்கள் கண்டுபிடிக்கப் பட்டமைக்கு பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகிகளே காரணம்..
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1809), ஸ்கொட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணரான பிரான்சிஸ் புக்கானன் புத்த கயாவை மீண்டும் கண்டுபிடித்தார். அப்பகுதியில் இந்து மற்றும் பௌத்த கலைப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் தான், பிரிட்டிஷ் இராணுவப் பொறியாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தலைமையிலான பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 'பௌத்த இந்தியா'வை மீண்டும் கண்டுபிடித்தனர். இந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழைய காலத்தைச் சேர்ந்த சீன யாத்ரீகர்களான ஃபா-ஹியன் மற்றும் ஹ்சுவான் சாங் ஆகியோரின் எழுத்துக்களிலிருந்து தங்கள் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தலங்களை வரை படமாக்கினர் .
அவர்களுடைய எழுத்துக்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. காலனித்துவ அரசாங்கம் இந்தியாவில் தொல்லியல் ஆய்வைத் தொடங்கியது மற்றும் தக்ஸிலா, நாலந்தா, சாரநாத், சாஞ்சி, லும்பினி மற்றும் புத்த கயா ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது. பண்டைய இந்தியாவில் பௌத்தத்தின் தாக்கத்தை நிரூபிக்க போதுமான பொருட்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த வரலாற்றின் பெரும்பகுதி இந்தியாவின் காலனித்துவத்திற்கு முன்னர் இந்திய மன்னர் (பின்னர் பேரரசர்) அசோகரால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் நாட்டின் காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இந்து மதமும் இஸ்லாமும் ஆதிக்கத்திற்காக போட்டியிட்டதால் பல விடயங்கள் மறைக்கப்பட்டன .
புத்த கயாவின் மறு கண்டுபிடிப்பு மற்றும் அதே நேரத்தில், புத்த கயாவிற்கு விஜயம் செய்த சேர் எட்வின் அர்னால்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையாளர் எழுதிய புத்தரின் வாழ்க்கை குறித்த ஆசியாவின் வெளிச்சம் என்ற கவிதை, இளம் தர்மபாலாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தக் கவிதை அவரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது,
அவர் கொழும்பில் உள்ள 'விக்டர் ஹவுஸில்' (தற்போது தர்மபால பெண்கள் பள்ளி) படுக்கையில் இருந்து எழுந்து, அப்போதைய இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் குறுகிய கடல் பகுதியான பாக் ஜலசந்தியைத் தாண்டி புனித தலத்திற்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டார். முன்னதாக ஒல்கொட்டுடன் ஜப்பானுக்கு விஜயம் செய்து இலங்கை வந்திருந்த ஜப்பானிய துறவிகளான கோசன் குணரதன மற்றும் டோகுசாவா ஆகியோரை அவர் தன்னுடன் கூட்டிச் சென்றார் . அவர்கள் 1891 ஜனவரி 22 அன்று சென்னை , பம்பாய் (இப்போது மும்பை) மற்றும் பெனாரஸ் வழியாக புத்த கயாவை அடைந்தனர்.
தர்மபால போதகயாவுக்குச் சென்றபோது, அசோகன் எழுப்பிய கோயில் மோசமாக காணப்பட்டது . இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் இருவரும் அந்த இடத்தில் வழிபாடு செய்தனர், ஆனால் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். பர்மாவின் மன்னன் (இப்போது மியான்மர்) புத்த மதத்தினரின் ஆர்வத்திற்கு பெரும்பாலும் காரணமானவர் , ஏனெனில் அவரது நாட்டு மக்கள் புத்தரை வணங்க வருகை தந்தார்கள் . ஒரு சில திபெத்திய பௌத்தர்களும் அவ்வப்போது வந்து செல்வார்கள். எவ்வாறாயினும், கோயிலின் கட்டுப்பாடு இந்து மஹந்திடம் இருந்தது, அவர் அடுத்த நிலத்தில் ஒரு அரண்மனை குடியிருப்பைக் கொண்டிருந்தார். பௌத்தர்களை கோயிலுக்குச் செல்ல அனுமதித்தார்.
தர்மபால கயாவின் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார்; பௌத்தர்களின் முக்கியமான புனிதத் தலம் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாழடைந்த நிலையிலும் ஒரு இந்து மத குருவின் கைகளில் இருப்பது கண்டு புத்தர் தியானம் செய்த மரத்தின் கீழ் (அல்லது அசல் மரத்திலிருந்து ஒரு மரக்கன்று) தர்மபால சபதம் எடுத்தார். புத்த கயாவின் உரிமை மற்றும் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பௌத்தர்களின் கைகளுக்கு மாற்ற வேண்டும் என்று அவர் சபதம் செய்தார்.
இந்துக்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக எண்ணுவதால் இந்துக்களும் புத்தரை வணங்கினர் மற்றும் கோயிலில் உள்ள புத்தர் சிலைக்கு காணிக்கை செலுத்தினர். ஆனால் புத்தர் ஒரு இந்துக் கடவுளைப் போல ஒரு துணியில் போர்த்தப்பட்டு இந்துக்கள் வழக்கமாகச் செய்வது போல் நெற்றியில் ஒரு 'திலகம்' அல்லது ஒரு வட்ட அடையாளம் அணிவிக்கப்பட்டிருந்தார். "பௌத்தர்களின் புனிதமான இந்த ஆலயம் முன்னோர்கள் எப்பொழுதும் பௌத்தத்திற்கு விரோதமாக இருந்த ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் இருப்பது ஒரு கோபமாகத் தோன்றியது" என்று தர்மபால ஒரு கட்டுரையில் எழுதினார்;
இலங்கைக்குத் திரும்பிய தர்மபால, புத்த கயாவை இந்துக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்காக அதே ஆண்டு மகா போதி சங்கத்தைத் தொடங்கினார். அவர் "சிங்களயேனி நெகிடியாவ். புத்த கயா-வ பேரா கனிவ்" ('உறங்கும் சிங்களவர்களே - புத்த கயாவைக் காப்பாற்றுங்கள்') என்ற அழைப்போடு இலங்கையை சுற்றி வந்தார். அவர் நான்கு புத்த துறவிகளை புத்த கயாவிற்கு அனுப்பினார்.
மகா போதி சங்கத்தை உருவாக்கிய தர்மபால மீண்டும் புத்த கயாவுக்குச் சென்றார். இடைவிடாத பிரசாரத்தில் இறங்கிய அவர், இந்த இரண்டாவது பயணத்தின் போது தனது குழுவினருடன் கோவிலின் மேல் தளத்திற்குச் சென்று, தன்னுடன் கொண்டு வந்த புத்தர் சிலையை வைக்க முயன்றபோது, அவர் மீது உடல்ரீதியாக வன்முறை பிரயோகிக்கப்பட்டது . மஹந்தின் தொழிலாளர்கள் அவர்களைத் தாக்கினர்.
சிலை வைக்கும் நிகழ்வை தடுத்ததற்காக, தர்மபால மஹந்தையும் அவரது ஊழியர்களையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். இது 'தி கிரேட் கேஸ்' என்று அறியப்பட்டது. இரு தரப்பிலும் ஆங்கிலேய வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையின் பின் ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர். மஹந்தின் ஊழியர்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகக் கண்டறிந்தனர். நீதவான் தனது உத்தரவை வழங்குகையில் "கோயிலின் அடிப்படையில் பௌத்த தன்மை" என்று குறிப்பிட்டார். புத்த கயாவுக்கான போரில் முதல் கால்கோள் இடப்பட்டது. தண்டனைகளுக்கு எதிராக மஹந்த் ஆங்கிலேயரான மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு மீண்டும் தோற்றார். பின்னர் அவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்,
கல்கத்தா உயர் நீதிமன்றம் இறுதியில் தர்மபாலவிற்கு எதிராக தீர்ப்பளித்தது மற்றும் மஹந்தின் ஊழியர்களின் தண்டனைகளை இரத்து செய்தது. இந்த தீர்ப்பின் அர்த்தம் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் கோயிலின் உரிமையை வைத்திருந்தது மற்றும் மஹந்த் நிர்வாக உரிமைகளைக் கொண்டிருந்ததாகும் . மனம் தளராத தர்மபால மஹந்திடம் இருந்து கோயிலைச் சுற்றியுள்ள சொத்துக்களை வாங்குவதற்கான அடுத்த சிறந்த நடவடிக்கையை எடுத்தார். மஹந்த் அந்த வாய்ப்பை மறுத்தார். தர்மபால சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கயாவில் நிலம் வாங்கினார். கல்கத்தா மற்றும் சாரநாத்தில் இருந்ததைப் போலவே இந்தியாவில் பௌத்தர்களுக்கு நிலத்தின் மீது சட்டப்பூர்வ உரிமைகோரல்களை நிறுவினார்.
புத்த கயாவைக் கட்டுப்படுத்துவதற்கான வழக்காடுகளின் இந்த காலகட்டம் முழுவதும் தர்மபால பலதரப்பட்ட திட்டங்களில் ஈடுபட்டார். அந்த சகாப்தத்தின் செல்வாக்கு மிக்க ஆளுமைகளிடம் ஆதரவு கோரினார். அவர் பிரித்தானியா , ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள அறிவுஜீவிகள், அக்கால தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் உட்பட இந்திய அனுதாபிகளுக்கு கடிதம் எழுதினார். காலனித்துவ இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் பெங்காலி உயரடுக்கின் ஆதரவு அவருக்கு இருந்தது. இதற்கிடையில் புதிதாக உருவாக்கப்பட்ட மஹா போதி சங்கம் தாய்லாந்து மற்றும் ஜப்பானில் உள்ள ரோயல்டியின் ஆதரவை வலுப்படுத்தியது. மஹா போதி சங்கத்தின் பதாகையின் கீழ் இலங்கையில் ஒரு வெகுஜன இயக்கம் இந்தியாவில் உள்ள பௌத்தர்களின் உரிமைகளைக் கோரி வந்தது. புத்த கயா கோவிலின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்காக உலகளாவிய கிளர்ச்சியுடன் சர்வதேச பௌத்தத்தின் அடையாளமாக புத்த கயா மாற்றப்பட்டது.
தர்மபால பின்னர் 1920 களில் மேற்கு நோக்கிச் சென்று பௌத்தத்தை அங்கு எடுத்துச் சென்றார், அங்கு தம்மம் ஒரு சில அறிஞர்களால் படிக்கப்பட்டது, ஆனால் அதற்கு மேல் எதுவும் நடைபெறவில்லை. புத்த கயாவை பௌத்தர்களுக்கு சொந்தமாக்குவதற்கான அடித்தளம் போடப்பட்டது. அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் மற்றும் பி.ஆர். அம்பேத்கர் போன்றவர்களின் மத்தியில் நீதியின் விதையையும் புத்த கயாவுக்கான பௌத்தர்களின் நியாயமான கோரிக்கையையும் விதைத்தார்.
தனது வாழ்க்கையின் இறுதி பகுதியில் புத்த துறவியாகி, புத்த கயாவுக்கான போராட்டத்தை முன்னெடுத்த தர்மபால, தாம் உருவாக்கிய மகா போதி சங்கத்திடம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், “புத்த கயா உரிமை ” தீர்க்கப்படாத நிலையில் 1933 இல் தர்மபால காலமானார். ஆனால் அவர் முன்வைத்த தவிர்க்க முடியாத கோரிக்கை அவரது மரணத்திற்குப் பிறகு மகா போதி சங்கத்தால் முறையாகப் பின்பற்றப்பட்டது.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திர இந்திய அரசாங்கம் புத்த கயா கோவிலின் உரிமையை பீகார் மாநில அரசிடமும், கோவிலின் நிர்வாகத்தை இந்துக்களும் பௌத்தர்களும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் 1949 ஆம் ஆண்டின் போத்கயா கோயில் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
1978 ஆம் ஆண்டு, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, அனகாரிக தர்மபாலவின் பெயரிடப்பட்ட மஹா போதி ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறந்து வைத்தார். யுனெஸ்கோ 2002 இல் புத்த கயாவை உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரதான கோவிலுக்கு நடந்து செல்லும் தூரத்தில் துறவிகள் மற்றும் யாத்ரீகர்கள் ஓய்வெடுக்கும் ஒரு மஹா போதி சொசைட்டி கட்டிடம் அமைக்கப்பட்டது . முக்கிய மகா போதி விகாரைக்கு அருகாமையில் பௌத்த நாடுகளின் புத்த கோவில்கள் மற்றும் ஓய்வு இடங்கள் உள்ளன. புத்தரை வணங்க உலகம் முழுவதிலுமிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு வசதியாக இந்திய அரசு சமீபத்தில் புத்த கயாவில் சர்வதேச விமான நிலையத்தை திறந்தது.